சரியாக மூன்று முப்பதுக்கு நல்ல வெயில் அடித்துக் கொண்டிருந்ததால், எப்படியும் தொடங்கி இருக்க மாட்டார்கள் என்று பாலபாரதிக்கு போன் அடித்துக் கேட்டால், "தொடங்கியாச்சும்மா.. எல்லாரும் வந்துட்டாங்க.. நீங்க வரலையா?" என்றார்.
"இந்த வெயிலிலா?" என்று கேட்க நினைத்து பயந்து கேட்காமல் அவசர அவசரமாகக் கிளம்பினேன்.
சாகரன் தேன்கூடு சாகரனுக்கு நினைவஞ்சலிகளுடன் தொடங்கியது பதிவர் சந்திப்பு. தொடர்ந்து
சென்னபட்டினம் குழு சார்பாக சாகரன் நினைவுமலர் வெளியிடப்பட்டது. மா.சிவகுமார் மலரை வெளியிட, சாகரனின் உற்ற தோழர் பாலராஜன் கீதா பெற்றுக் கொண்டார்.
அடுத்து, சிறில் அலெக்ஸ் தேன்கூடு பெட்டகம் பற்றிப் பேசினார். இதெல்லாம் முடிந்த பின்னால் தான் நான் பூங்காவுக்குப் போய்ச் சேர்ந்ததே! ;)
மாற்று! - சிறில் அடுத்தபடியாக பாஸ்டன் பாலாவை "ஸ்னாப் ஜட்ஜ் ஏன்? எதற்கு?? எப்படி???" என்று கேள்விகளால் துளைத்தோம். மாற்று! பற்றியும் பேச்சு வந்தது. மடை திறந்த வெள்ளம் போல் பேசினார் சிறில். பதிவர் சந்திப்பு நிகழ்ந்த மூன்று மணிநேரமும் முழு உற்சாகத்தோடு சோர்வடையாமல் எந்த தலைப்பானாலும் பேசியது சிறில் அலெக்ஸ் மட்டும் தான்:)
"மாற்று! தளத்தை இன்னும் சம்பிரதாயமாக, விளம்பரப்படுத்தி நிறுவவில்லை" என்பது சிறிலின் எண்ணம். "மாற்று! தளத்தில் பக்கங்களில், இன்னும் அதிக பதிவுகளைக் காட்சிப்படுத்தலாம்" என்றும் சொன்னார்.
வலைபதிவர் உதவிப்பக்கம் - விக்கிஅடுத்தபடியாக, "தமிழ்வலைபதிவர் உதவிப்பக்கத்தின்" செயல்பாடுகள் குறித்து விக்கி பேசினார். "நாமாக விதவிதமாகப் பதிவுகள் இடுவதை விட, பயனர்களின் கேள்விகள் என்று ஏதும் இருந்தால், அவற்றுக்குப் பதில் சொல்லும் விதமான இடுகைகள் இடலாம்" என்று சிறில் சொன்னார். "பதிவர் உதவிக்குழுவைச் சேர்ந்த எல்லாருக்கும் வசதியான ஒரு வாரத்தைத் தேர்ந்தெடுத்து பதிவர் குறைகேட்கும் வாரம் போல எல்லாருக்கும் உள்ள கேள்விகளைச் சேகரிக்கலாம்" என்றேன். எவ்வளவு தூரம் சாத்தியம் என்று பேச வேண்டும்.
ப்ளாக் கேம்ப் : வலைபதிவுக்கும் சமூகத்துக்கும் ஒரு பாலம் - ஓசை செல்லா
ஓசை செல்லா கோவையில் தான் நடத்த திட்டமிட்டிருக்கும் ப்ளாக் கேம்ப் பற்றிப் பேசினார். "வலைபதிவுகளை எழுதுபவர்களே படிப்பவர்கள் என்ற நிலையை மாற்றி நம்மைத் தவிர்த்த சமுகமும் வலைபதிவுகளைப் படிக்கத் தொடங்கும் பொழுது தான் இவற்றிற்கு ஒரு பயன் இருக்கும். அதற்கான அடுத்த கட்ட நடவடிக்கையாக கோவையில் நடத்தப் போகும் ப்ளாக் கேம்ப் வழிவகுக்கும்" என்றார் செல்லா.
அடுத்து மாற்று!, கூகிள் ரீடர் சேவைகள் குறித்து நான் பேசுவதாக இருந்தது. ஏற்கனவே சிறில் பேசியதைச் சொல்லித் தப்பித்துக் கொள்ள வசதியான தலைப்பாகையால், ரொம்ப சுலபமாகப் போய்விட்டது.
வலைபதிவுகள் சிந்தனைக் கிட்டங்கியாக வேண்டும்: தருமிபாதிப் பேச்சுக்களிடையிலேயே புகைக்கப் போன சிலர்(பலர்?) மீண்டு வந்தபின், தருமி தன்னுடைய வலைபதிவு அனுபவங்களைப் பேசினார். பல்வேறு பின்னணிகளிலிருந்து வந்திருக்கும் இளைஞர்கள் இத்தனை விஷயஞானம் உள்ளவர்களாகவும், சமூகப் பொறுப்புள்ளவர்களாகவும் இருப்பதை வியந்த தருமி, வலைப்பதிவுகளில் உள்ள சிந்தனை ஒரு சிந்தனைக் கிட்டங்கியாக(thinktank), மாற வேண்டும் என்று விரும்பியதாகவும் பல்வேறு விதமான சிந்தனைகள் கலக்கும் இவ்விடத்தில் அதுபோன்ற ஒருமித்த கிட்டங்கி என்பது சாத்தியமில்லை என்று இப்போது உணருவதாகவும் கூறிய போது, வெவ்வேறு எண்ணங்களுடைய வெவ்வேறு சிந்தனைகளின் வெளிப்பாடான இந்த வலைப்பதிவுலகமே சிறந்த கிட்டங்கி என்ற எதிர்க்கருத்து பலரிடமிருந்து வந்தது. ஒரே கருத்தை முன்வைத்து சிந்தனைக் கிட்டங்கி என்று அழைப்பதை விட, பல்வேறு கருத்துக்களும் இருக்குமிடத்தில் வந்து படிப்பவர்கள், எது சரி, எது தவறு என்பதைத் தத்தம் அனுபவங்கள், கல்வி, அறிவு சார்ந்து சிந்தித்து சீர்தூக்கி முடிவெடுப்பதே சரியானதொரு சிந்தனைக் கிட்டங்கியின் செயலாக இருக்கும் என்பதே என்னுடைய கருத்தும்.
அடுத்தபடியாக தருமி சொல்லிய ஒருவிசயம் அமுகவின் கொள்கைக்கு விரோதமாக இருந்தாலும், பதிந்தே தீரவேண்டும்.. "அனானி முன்னேற்றக் கழகம்னு எல்லாம் சொல்றீங்க, ஆனா, ஒரு பதிவுல கருத்து சொல்லணும்னா, ஏதாவது ஒரு புனைப்பேரோடவாவது வந்து சொல்லுங்க.." என்ற பேராசிரியரின் கருத்துக்கு அமுக தலைகள் கடும் கண்டனம் தெரிவித்தார்கள். இணையத்தில் எழுதிக் கொண்டிருக்கும், எல்லாரும் அறிந்த புனைப்பெயரில் சொல்லாமல் ஏதோ அந்தச் சந்தர்ப்பத்துக்குத் தோன்றிய ஒரு புனைப்பெயரில் வருவதற்கும், அனானிமஸாக வருவதற்கும் அதிக வித்தியாசம் ஏதும் இல்லையே தருமி? எப்படி இருந்தால் என்ன?
மாணவர்களை வலைபதிவுக்குள் அழைத்துவர வேண்டும்
தருமியின் சிந்தனைக் கிட்டங்கி யோசனையை ஒட்டி, அப்படிச் சமூகத்துக்கும் சென்று சேர வேண்டுமானால், மாணவர்களை வலைபதிவுக்கு அழைத்து வருவதே வழி என்று விவாதம் திசை திரும்பியது. ஏற்கனவே சிலர் அதற்கான பணிகளில் ஈடுபட்டிருப்பதாக பாலபாரதி சொன்னார். "நிறைய பேருக்குத் தமிழில் எழுதலாம் என்பதும், அது இத்தனை சுலபம் என்பதும் தெரியவே இல்லை" என்று ஆதங்கப்பட்ட செல்லா, "கோவையில், ஒவ்வொரு இணைய மையத்தின் வாயிலிலும், தமிழ்மணம், தேன்கூடு, தமிழ்ப்பதிவுகள், சுரதாவின் எழுத்துரு மாற்றி இவற்றின் உரலை ஒரே ஒரு நாள் ஒட்டியதற்கே ஹிட்ஸ் எகிறியது. இது போன்ற விவரங்கள் அடங்கிய போஸ்டர்களைச் சுலபமாக வடிவமைத்து அவரவர் இருக்கும் இடத்திற்கு அருகிலுள்ள இணைய மையங்களில் ஒட்டி வைக்கலாம். இணைய மையத்தின் பொறுப்பாளர்களுக்கும் இந்த சைட்களை அறிமுகப்படுத்தினாலே பலருக்கும் அவர்களே பரப்பிவிடுவார்கள்" என்றும் சொன்னார்.
மாணவர்களைத் தமிழ்ப் பதிவுலகுக்கு அழைத்துவரும் அளவுக்கு பதிவுலகம் ஆரோக்கியமாக இருக்கிறதா? என்று அடுத்த தலைப்புக்குச் சென்றது விவாதம். "என்னுடைய பதிவெல்லாம் மாணவர்கள் படிக்கிற சமாச்சாரமே இல்லை!" என்று சுய வாக்குமூலம் கொடுத்தார் செல்லா. அதையொட்டி சிவக்குமாருக்கும், செல்லாவுக்கும் சின்ன விவாதம் நடந்தது.
சிறுவர் திரட்டி- அனானி"படிக்கும் மாணவர்கள் தமிழ்ப்பதிவுகளுக்கு வரவேண்டும் என்று எங்கோ இருப்பவர்களைப் பற்றிப் பேசுகிறோமே, நம்வீட்டுப் பிள்ளைகளை முதலில் அழைத்துவருவோமே!" என்று நான் கேட்ட போது, "சிறுவர்கள் படிக்கும் அளவுக்கு முதலில் வலைபதிவுகளை ஆரோக்கியமாக்குவோம், அதன்பின் அவர்களை அழைத்துவருவது நல்லது" என்றார் ஓகை. "சிறுவர்களுக்கு என்று தனித் திரட்டி உருவாக்கி, அதை ஓரளவுக்காவது கண்காணித்து வந்தாலொழிய சிறார்களைப் பதிவுலகுக்கு அழைத்து வருவது என்பது எட்டாக்கனி தான்" என்று சொன்னது யார் என்று எனக்கு நினைவில்லை :) ஆனால், சிறுவர் திரட்டி, அதன் கண்காணிப்புக் குழு என்பது மிகவும் ஆரோக்கியமான யோசனையாக தோன்றியது.
எ-கலப்பை குறுந்தகடு இலவச விநியோகம் - ஓகை நடராஜன்
இதற்கிடையே தமிழ் எழுதுகருவிகளைப் பற்றிப் பேசும் போது எகலப்பை போன்ற இலவச கருவிகள் இருப்பது தெரியாமல் விலை கொடுத்து தமிழ்க் கணிமைக்கான மென்பொருளை வாங்குபவர்கள் பற்றிப் பேச்சு எழுந்தது. "எ-கலப்பை போன்ற மென்பொருள் பற்றிய விழிப்புணர்வேற்படுத்த அடுத்த புத்தக கண்காட்சியில் ஏன் இதனை சின்னச் சின்னக் குறுந்தகடுகளாகச் செய்து இலவசமாகத் தரக் கூடாது?" என்று கேள்வி எழுப்பினார் பாலபாரதி. அப்படிச் செய்தால், அவற்றிற்கான செலவைப் பகிர்ந்து கொள்வதாக உடனுக்குடன் வாக்களித்தார் ஓகை நடராஜன். மக்கள் தொலைக்காட்சியின் செய்திகளின் போது இது போன்ற செய்திகளைப் பகிர்ந்து கொள்ளலாம் என்று வாக்களித்தார் கௌதம்.
தினமலர், தினத்தந்தி, விகடன், குமுதம் போன்ற தமிழ் ஊடகங்கள் இன்னமும் யூனித் தமிழுக்கு மாறாமல் தனக்கென ஒவ்வொரு விதமான எழுத்துருக்களை வைத்திருப்பதைக் குறித்து இராம.கி ஐயா வருந்தினார். "எப்படியும், நம்மைப் போன்ற நிறைய பதிவர்கள் யூனித்தமிழில் எழுதத் தொடங்கி அதில் பல இணைய பக்கங்கள் வந்துவிட்டால் இவர்களும் மாறிவிடுவார்கள்" என்று கருத்து தெரிவித்தார் மாஹிர்.
இதற்கிடையே மக்கள் தொலைகாட்சியின் ஒளிப்பதிவாளர்களும், குங்குமம் பத்திரிக்கையாளர்களும் வந்து படமெடுத்தார்கள். இன்று காலை 7:30 மணி செய்திகளில் இந்த விவரம் ஒளிபரப்பப்பட்டது.
தருமி பேசி முடித்தவுடன், கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக சிதறி, தனித்தனியான கலந்துரையாடல்களாகிவிட்டது. சிந்தாநதியின் தமிழ்நாடு டாக் பட்டிமன்றங்களில் பங்கு பெற்று, வெற்றி பெற்ற இனியன், நந்தா மற்றும் எனக்கும் வரவேண்டிய பரிசுகளை அளித்தார்கள். தொடர்ந்து புகைப்படங்கள் எடுக்கப்பட்டவுடன் கூட்டம் பல்வேறு பிரிவுகளாகக் கலைந்தது.
தேநீர் சாப்பிடலாம் என்று சொல்லி பின்புற வாயில் வழியாக அழைத்துச் சென்று ஒரு கடையும் இல்லாமல் வெட்டியாக நேரம் செலவழிக்க வைத்த பாலாபாய்க்கு, வழக்கம் போல கண்டனங்களுடன் கூட்டம் இனிதே நிறைவுபெற்றது.பங்கேற்றவர்கள் விவரங்கள்: (என்னுடைய மொக்கை குறிப்புகளோடு ;) )
1.
உங்கள் நண்பன் சரவணன் : இந்த முறை சந்திப்பு கொஞ்சம் புரிகிறாற் போல இருந்தது என்று கடைசியாக வாக்களித்தார். ;)
2.
மா. சிவகுமார்3.
தருமி - "தாத்தா முறுக்கெல்லாம் சாப்பிட முடியுமா?" என்று கிண்டல் செய்ததில், சிவக்குமாரின் முறுக்கையும் மிடுக்காகக் கடித்து தூள் பண்ணிவிட்டார்..
4.
வினையூக்கி - எப்போதோ வாக்கு கொடுத்த ஐநூறு ரூபாய் நன்கொடை என்னிடம் கொடுக்காததனினால் பல மாதங்களாக சரியாக தூங்காமலிருந்தவர், கடைசியாக நேற்று நன்றாக தூங்கி இருப்பார் என்று நினைக்கிறேன்.
5.
ஓகை நடராஜன் - நான் சொல்றதுக்கு ஒண்ணுமே இல்ல..
லக்கி சொல்லிட்டாரு ;)
6.
ஐகாரஸ் பிரகாஷ்7.
பாஸ்டன் பாலா8. லியோ சுரேஷ்: இன்னும் வலைபதிவு தொடங்கவில்லை என்றார். ஆனால், நிறைய விசயம் வைத்திருக்கிறார். சீக்கிரமே எழுதுவதாக வாக்களித்திருக்கிறார்.
9.
விக்கி10.
சிறில் அலெக்ஸ்: மொதல்லயே சொல்லிட்டேன். சோர்வடையாமல் பேசி முழு உற்சாகத்தோடு நிறைய கருத்துக்கள் பகிர்ந்து கொண்டது சிறில் தான். மக்கள் தொலைக்காட்சிக்குக் கொடுத்த பேட்டி உட்பட பல விசயங்களை எந்த முன்னேற்பாடும் இல்லாமல் அழகாக சொல்லிக் கொண்டே இருந்தார்.
11. பாலராஜன் கீதா : இரண்டு நாட்களாக, "பதிவர் சந்திப்புக்கு வாங்க, நினைவு மலர் நீங்க தான் வாங்கிக்கிடணும்" என்று டார்ச்சர் பண்ணிக் கொண்டே இருந்தேன் ;). கடைசியில் நான் லேட்..
12.
இராம.கி ஐயா
13.
லக்கிலுக்: செக்கச் செவேலென்று ஒரு டீசர்ட் போட்டுவந்து தருமியின் கருப்பு டீசர்ட் பக்கத்தில் நின்று அவ்வப்போது கட்சிப் பாசம் காட்டிக் கொண்டே இருந்தார்.
14.
நந்தா: நாமக்கல்லார் வலைபதிவு அப்ரண்டைஸ்களுக்காக நடத்திய வகுப்புகளில் கலந்து கொண்டவர்களுள் இவரும் ஒருவர்.
15.
உண்மைத் தமிழன்: நான் ஒண்ணும் சொல்றதா இல்லை..
சுகுணா திவாகர் இன்னும் தெளிவாக எழுதிவிட்டார் ;)
16.
சுந்தர்: "நினைவு மலர்" என்று கொடுத்ததைச் சரியாக பயன்படுத்தியவர் இவர் ஒருவர் தான். தனக்கு நினைவில் இருக்கத் தேவையான எல்லார் மின் முகவரியும்/தொலைபேசி எண்ணும் வாங்கி அந்தப் புத்தகத்தில் எழுதிவைத்துக் கொண்டார் ;)
17.
ஓசை செல்லா : என்னத்தச் சொல்ல, என்னைப் பாத்து, என்ன்ன்னைப் பாத்து நிறைய மொக்கைன்னுட்டாரு.. செல்லா, நீங்க எங்க தல பாலாவோட போனில் பேசினதே இல்லையா? ;)
18.
ப்ரியன்: இப்போதும் கூட நிறையபேர், ப்ரியனையும், விக்கியையும் குழப்பிக் கொள்கிறார்கள். சந்திப்பில் கூட யாரோ இதே போல் அவரிடம் வந்து இவரைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்.
19.
சு.க்ருபாசங்கர்: மோகன் தாஸுடன் சீரியஸாக கணினி தொழிற்நுட்பங்களைப் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தார். இரும்படிக்கும் இடத்தில் கொஞ்சம் நேரம் உட்கார்ந்துவிட்டு, தலைக்கு எட்டாமல் போகவும் பறந்துவிட்டேன்.
20.
மோகன்தாஸ்: அக்கா மீது ஏன் இத்தனை பாசம் என்று எனக்கு இப்பதான் புரியுது ;) தினமும் உங்கள் கூந்தலை அள்ளி முடிந்து விடும் அக்கா மீது அந்தப் பாசம் இல்லாம போகுமா :))) [உடனே பெண்கள் மட்டும் தான் கூந்தல் வளர்க்கணுமா என்று வந்துடாதீங்க, இது ச்ச்சும்மா விளையாட்டுக்குத் தான் :)) ]
21.
ஜி.ராகவன் : சீக்கிரமே கிளம்பிவிட்டார், ஜி.ரா வந்ததுக்கே நன்றி சொல்லணும்..
22.
முத்து தமிழினி23.
பகுத்தறிவு 24.
பொன்ஸ்25.
We the People26.
ஜே கே : சிபியின் நண்பர். இந்தச் சந்திப்பில் பாகசவில் சேர்ந்த கன்னிச்சாமி ;)
27.
நாமக்கல் சிபி : புதுப் புது பதிவர்களாக பாகசவில் சேர்த்துக் கொண்டே இருக்கிறார்..
28.
விஜயராஜ்29.
மாரிக்கனி30.
மாஹிர் : கூகிளிலும் கூட்டாக சாட் செய்வதற்கு ஒரு புதுக் கருவியை உருவாக்கிக் கொண்டிருக்கிறார் தமிழூற்று மாஹிர்.
31.
நவீன் பிரகாஷ்32. தமிழ்வாய்ஸ்
33.
'மரபூர்' ஜெய. சந்திரசேகரன்34.
யோசிப்பவர்: "ஹிந்தியில் நேரடியாக வலைபதிவு செய்யும் தொழில்நுட்பத்தை ப்ளாக்கர் அறிமுகப் படுத்தியிருப்பதை ஏன் தமிழிலும் நாம் செய்ய முடியாது?" என்று கேட்டுக் கொண்டிருந்தார். அத்தனை ஆழமான நுட்ப அறிவு இல்லாததால், க்ருபாசங்கரைக் கைகாட்டிவிட்டேன் ;)
35.
நிலாரசிகன்36.
தங்கவேல்: அந்த ஹெல்மெட்டை விடவே மாட்டீங்களா? பூங்கா மண்ணிலும் பாதுகாக்கணுமா?
37.
மிதக்கும்வெளி: நடை பாதையில் வாக்கிக் கொண்டிருந்தவர்களைக் கவனித்த அளவுக்கு இவருக்குக் கூட்டம் ரசிக்கவில்லை. சுற்றுப்பாதையில் நடந்து கொண்டிருந்த கருப்பு டிசர்ட் பெண்(இதுலயும் கருப்பா? ;) ) இல்லாமல் இருந்திருந்தால், சீக்கிரமே எஸ்கேப் ஆகி இருப்பார் என்று தோன்றியது ;)
38.
செந்தில்39.
WeeBee40.
ஜி. கௌதம்: தொலைக்காட்சிக் குழுவை அழைத்து வந்ததோடல்லாமல், சந்திப்பின் போது "பெண்ணே நீ" பத்திரிக்கை விநியோகத்துக்கும் ஏற்பாடு செய்திருந்தார் கௌதம்.
41.
வடுவூர் குமார்: திடீர் விருந்தினராக வந்து அசத்தியவர் குமார். சிங்கையிலிருந்து விடுமுறைக்காக வந்திருந்தாராம்.
42.
சார்லஸ்: புதிய பதிவர். அன்புடன், முத்தமிழ்க் குழுமங்களில் ஏற்கனவே சுறுசுறுப்பாக செயல்பட்டு வருபவர்.
43.
யெஸ். பாலபாரதிஇது தவிர, மரத்தின் மேலிருந்து பார்த்துக் கொண்டிருந்த
இட்லிவடை ;), மற்றும் அவ்வப்போது நாங்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே, கைதட்டி ரசித்துக் கொண்டிருந்த [நிறுத்த வைத்த ;)] அனானிக் கூட்டம் ஒன்று, மொக்கை தாங்காமல் துண்டை விரித்து எங்கள் கூட்டத்திற்கு மிகச் சமீபத்தில் படுத்து உறங்கிய அனானி ஒருவர்.
சந்திப்பின் பொழுது (என்னிடம்) தொலைபேசியவர்கள்:1. சந்திப்புக்கு வராமல் எஸ்கேப்பான செந்தழல் ரவி
2. 22ஆம் தேதி பதிவர் சந்திப்பு பற்றிய முதல் பதிவு போட்ட அபி அப்பா
3. அமுக அவுஸ்திரேலிய கிளையை முழுக் குத்தகை எடுத்து நடத்தும் பொட்டீக்கடை சத்யா
நிச்சயம் வந்துவிடுவதாக வெள்ளிக்கிழமை கூட உறுதி கூறிய சிவஞானம்ஜி, சிந்தாநதியின் பரிசை வாங்கிக் கொள்ள வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட இனியன், தாயகம் திரும்பிய கப்பி பய, முதல் பதிவர் சந்திப்பு என்று குதித்துக் கொண்டிருந்த பிரின்ஸ், "அடுத்த சந்திப்பில் சாகரன் பற்றிப் பேசுவீங்கன்னா, நான் கண்டிப்பா வருவேன்" என்று வெகு நாட்களுக்கு முன்பே சொல்லிக் கொண்டிருந்த தேவ், பெங்களூரில் இருந்து வருவதாக சொல்லி இருந்த மகேஸ், இவர்கள் எல்லாம், கடைசி நிமிடம் வரை வந்துவிடுவார்கள் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்.. ஆனால் :((((