வாசனுக்கு ஒரு சில பாடல்கள் நன்றாக பாடத் தெரியும். ஆனால் 'குறை ஒன்றும் இல்லை' அதில் கிடையாது. அடிக்கடி அந்தப் பாடலைப் பாடச் சொல்லிக் கேட்பான். நானும் பாடுவேன். அவ்வளவு தான். இந்தியா போய் முதல் நாள், நான் குகனைத் தூங்க வைக்க முயன்று கொண்டிருக்கும்போது, இவன் இந்தப் பாடலை முழுமையாக பாடிக் காட்டி இருக்கிறான். அடுத்த நாள் காலை காபி குடிக்க அனைவரும் டேபிள் அருகில் குழுமி இருக்கும்போது, அவன் பாட்டியும், கொள்ளுப் பாட்டியும், இது மாதிரி பாடினான் என்று சொன்னார்கள். எனக்கு ரொம்ப ஆச்சரியம்.
'எங்க வாசன், நான் கேட்கவே இல்லையே! பாடு பார்க்கலாம்' என்றேன். கொஞ்சம் தாஜா, கொஞ்சம் தூண்டுதல் என்று பாடத் தொடங்கினான். பல்லவி மட்டும் பாடுவான் என்று நான் பார்த்துக் கொண்டிருக்கையில் எல்லா சரணமும் பாடி முடித்து விட்டான்! எனக்கு ரொம்ப ஆச்சரியம். எல்லாரும் கடைசி வரை முடியும் போதில் கைதட்டவும், வாசன் தானும் கைதட்டிக் கொண்டான். தட்டிவிட்டு, 'குட் ஜாப் வாசன்' என்றான். நாங்கள் எல்லாரும் ஆமா வாசன் குட் ஜாப் என்றோம்.
பின்னர் 'ஷவர்! ' என்றான் .. முதலில் எங்களுக்குப் புரியவில்லை. பின்னர் தான் புரிந்தது, சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மாதிரி ஷவர் பண்ணச் சொல்கிறார் என்று! உடனே ப்ரிஜிலிருந்து சாக்லெட் எடுத்து அவன் பாட்டி நிஜமாகவே ஷவர் செய்ய, அண்ணனும் தம்பியும் எடுத்துச் சாப்பிடத் தொடங்கினர்.
அப்புறத்திலிருந்து தம்பி தூங்க வேண்டும் என்றால், அண்ணனே பாடிக் கொள்கிறான். நமக்குத் தொல்லை விட்டது பாருங்க ;-)