வாசனுக்குத் தோட்டத்தில் போய் செடிக்குத் தண்ணீர் விடுவது என்றால் ரொம்ப பிடிக்கும். இப்போதெல்லாம், பெரியவர்கள் இல்லாமலே தானே போய் ஒவ்வொரு செடியாக பார்த்து பார்த்து தண்ணீர் விடவும் பழகி விட்டான். நல்லவேளையாக பின் கதவு மட்டும் திறக்கவரவில்லை. அதனால் எங்களிடம் கேட்டுக் கொண்டு போவான்.
YouTube-இல், 'Do you like broccoli? Yes I do". என்று ஒரு பாட்டு வரும். அது இவனுக்கு மிகவும் பிடித்துப் போனதால், எங்களுக்குத் தேவையான விஷயங்களுக்கு அதைப் பயன் படுத்துவோம்.
அன்று ரொம்ப வெயில். மாலை நாலரை மணிக்கு மொட்டை வெயில். இந்த வெயிலில் வெளியில் போய் தண்ணீர் விட வேண்டாம் என்று அவனை வேறு ஏதாவது மாற்றி விடலாம் என்று அவனுக்கு மிகவும் பிடித்த பொரி வறுத்து வைத்திருந்தது.
வாசன் எதிர் பார்த்தது போலவே தூங்கி எழுந்து வந்தவுடன் வெளியில் போக அடம்பிடித்தான். நாங்கள் 'Do you like பொரி" என்று வழக்கம் போல பாடினோம். வழக்கமாக 'Yes" என்றோ "no" என்றோ சொல்லி, அதற்கேற்றாற் போல பாட்டையும் பாடும் பிள்ளை, பதிலுக்கு 'Do you like சி தண்ணி" என்றது... அப்புறம் அப்பீல் ஏது ? கதவைத் திறந்து வெளியேறி தண்ணீர் விடப் போய்விட்டேன்....