ஒரு திரைப்படத்தில், ஒரு புத்தகத்தில், ஒரு பயணத்தில் கட்டுண்டு போக
வேண்டுமென்றால் என்னவெல்லாம் தேவைப்படுகிறது? எனக்குத் தேவை வெறும் கதை
மட்டுமே. ஒவ்வொரு பாத்திரமும் அடுத்து என்ன செய்யப் போகிறது என்ற ஆர்வம்.
வேலை நேரம், 8:30 ரயில், தேர்வு, வீட்டினரின் தொலைபேசி அழைப்பு என்று
எதுவும் கலைக்கமுடியாத ஆர்வத்தைக் கொடுக்கும் ஒரு கதையைப் பாதியில்
விட்டுவிட்டு என்னால் வர முடிந்ததே இல்லை.
இரண்டு வயது நிரம்பும் முன்னரே கதை சொல்லக் கற்றுக் கொடுத்தார் என்
அத்தைப் பாட்டி. அவரிடம் கற்ற கதையை அவருக்கே கண், மூக்கு, வாய் வைத்துச்
சொல்வது எனக்குப் பிடித்தமான பொழுதுபோக்காக அப்போது இருந்தது. அதன்பின்னர்
நான் சொன்ன அம்யா கதைகளைப் பற்றி என் அம்மா நிறைய சொல்லுவார். குழந்தையாக
இருந்த காலத்தில், நான் குளிக்கவோ, சாப்பிடவோ, தூங்கவோ வேண்டுமென்றால்
அப்பாவோ அம்மாவோ அருகிலமர்ந்து அம்யா கதை கேட்டால் தான் நடக்கும். கதை
சொல்ல வேண்டாம்; கேட்க வேண்டும். கீழ்வீட்டிலிருந்து கொண்டு என்னை
‘மாடியாத்து பூர்ணா’ பொம்மையாக்கி விளையாடிய வீட்டுச் சொந்தக்காரர் மகள்
ரம்யா தான் என் கதைகளின் நாயகி. நிஜத்தில் அவள் பெரியவளாய், நான்
சின்னவளாய் இருந்த காலங்களை மாற்றி, அம்யா ஓடி வருவதும், விழுவதும், அவள்
அம்மா திட்டுவதுமாய் எனக்குப் பிடித்தச் சித்திரத்தைத் தீட்டிக் காட்ட
அந்தக் கதைகள் உதவின.
கொஞ்சம் வளர்ந்த போதில் என் மாமா மகனுக்குக் கதை சொன்ன நாட்கள் எனக்கே
நினைவில் இருக்கின்றன, அவன் மறந்துவிட்ட போதும். வழக்கமான குழந்தைகள்
கதைகள் தான் முதலில் சொன்னவை. மெல்ல மெல்ல, அதில் சொந்தக் கதை கலக்கத்
தொடங்கியது எப்போதென நினைவில்லை. கதை சொல்லும் வழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக
கரைந்து, சொல்லும் கதை கேட்க ஆளில்லாமல் போன நாட்கள் அதிகரித்த பொழுதுகளில்
தான் எழுதும் வழக்கம் தொடங்கியது. சின்னச் சின்ன கதைகள், பாதி உண்மையாக
நடந்தவை, மீதி எப்படி நடந்திருக்க வேண்டும் என்று நான் நினைத்தவை.
விடுமுறைக் காலப் பயணங்களில் அப்பாவின் பக்கத்தில் உட்கார்ந்து
பயணிக்கவே ரொம்பவும் பிடிக்கும். அப்பா அதிகமாக, ‘இதைச் செய்யாதே!’, ‘அதைச்
செய்யாதே!’ என்று ஒழுக்கம் கற்பிக்க மாட்டார் என்பதோடு, அழகான கதைகள்
நிறைய சொல்லுவார். ஒரு இடத்தைப் பற்றிய பழங்கால வரலாற்றைக் கதை போல
சொல்லும் இயல்பு அப்பாவுக்கு இருந்தது. அப்பா சொல்வது மட்டுமே வேதம், பாட
புத்தகங்கள் கூட தப்பாகச் சொல்ல வாய்ப்பிருக்கிறது என்று நம்பி கேட்கும்
மனமும் எனக்கிருந்தது. சமகால வரலாற்றையும் பத்திரிக்கைச் செய்திகளையும்
இடையிடையே அம்மா சொல்வதும், அப்பா சொல்லும் சரித்திரத்தில் சில தவறுகளைச்
சரிசெய்வதும் கூட அப்பாவின் கதைகளைக் குறைத்துக் காட்டும் முயற்சியாக எண்ணி
மறுதலித்ததுண்டு.
சரித்திரம் மட்டுமல்ல, நிகழ்காலத்திலேயே அருகில் இருக்கும் ஒன்றிரண்டு
மனிதர்களைப் பாத்திரங்களாக்கி சின்னச் சின்ன நாடகங்களை அப்பா
உருவாக்கிவிடுவார். எதிர் இருக்கையில் உட்கார்ந்து பயணிப்பவர்களைப்
பார்த்தபடியே, “அந்த அம்மா அப்பத்திலேர்ந்து அவங்க வீட்டுக்காரரை
எழுந்திருக்கச் சொல்றாங்க, பையனுக்கு ஜன்னல் சீட் வேணும்னு. ஆனா அவர்
எழுந்துக்காம அடம் பண்ணிட்டிருக்கார்” என்று அவர்கள் பேசுவதை
தூரத்திலிருந்து பார்த்தே ஊகமாய்ச் சொல்லும்போது, அது உண்மையாகத் தான்
இருக்கவேண்டும் என்று நம்பி இருக்கிறேன். கொஞ்சம் பெரிய வயதில், ‘இப்படி
வம்பு பேசாதப்பா!’ என்று சொன்னாலும், பயணங்களில் அடுத்தவர்களைக் கவனிக்கும்
பழக்கம் அவர்களுக்கு உதவவும், நாம் உதவி கேட்கவும் கூட பெரிதாக
பயன்பட்டிருக்கின்றன.
இன்றைக்கும் கூட ஒரு நல்ல கதையுள்ள படமோ புத்தகமோ ஈர்க்குமளவுக்கு
வேறேதும் மனம் மயக்குவதில்லை. “Exception எல்லாம் handle பண்ணிட்டீங்க
சங்கீதா, raise பண்ணணும் அப்பத் தான் நம்ம program ஒழுங்கா வேலை செய்யும்”
என்றதை விட, “இப்ப உங்க பொண்ணு ஏதாச்சும் விசமம் பண்ணா, அவளை நீங்க
கண்டிக்கிறீங்க, அத்தோட விட்டுட்டீங்கன்னா, நீங்களே handle பண்ணின மாதிரி.
ஆனா கொஞ்சம் பெரிய பிரச்சனையா இருந்தா, உங்க வீட்டுக்காரர் வந்ததும்
அவர்ட்ட complaint பண்ணுவீங்க இல்லையா, அதுக்குப் பேரு தான் raise
பண்ணுறது” என்று கதையாக சொல்லிக் கொடுக்கும்போது நிரலி கூட கதையாகி அழகாகி
ஆர்வமூட்டுவதாகி புரிந்து விடுகிறது.
கொஞ்ச நாட்களாக PL/SQL மொழியில் தான் என் கதைகள் ஓடிக்
கொண்டிருக்கின்றன.. அடடா, போனவாரம் எழுதிக் கொடுத்த கதையில் ஏதோ இலக்கியப்
பிழையாம், பார்த்துவிட்டு வந்து மிச்சம் கதைக்கலாம்…
பிகு: கடந்த சில நாட்களில் பார்த்த, படித்த The Dreamer, Good Will
Hunting மற்றும் பா.ராவின் மெல்லினம் பற்றி எழுதத் தான் ஆரம்பித்தேன்.
ஆனால் என்னுடைய கதைகள் எப்போதுமே இலக்குகளின் எல்லைக்குள் நின்று நடப்பவை
இல்லை என்பதால் எங்கேயோ போய், எப்படியோ முடிந்துவிட்டன..