Monday, July 31, 2006

பாலு..

"என்னக்கா, ரெண்டு நாளா ஆளையே காணோம். ஊருக்குப் போயிருந்தீங்களா?" தண்ணீருடன் வந்த பாலு கேட்டான்.

"ப்ச்." என்றபடி தலையாட்டினேன், அவன் கொடுத்த தண்ணீரை அருந்திக் கொண்டே..

"வழக்கம் போல ஸ்ட்ராங்க் காபி தானேக்கா? வேற எதுனா வேணுமா? "

"டிபன் இன்னிக்கி இங்க தாண்டா!.. சொல்லிடு" என்றேன்.

மனமும் உடலும் சோர்ந்திருந்தது. மேனேஜருடன் இன்றைக்கும் தகராறு. என்னவோ அவனுக்குச் சேவை செய்யவே என் வீட்டில் பெற்றது போல.

பொதுவாகவே அவனுக்குத் தான் பெரிய ஆள் என்று எண்ணம். பெண்கள் வேலை செய்வதே பொறுக்காதவன்.. இதற்கு மேல், அவனுக்குக் கீழே வேலை செய்பவர்கள் என்றேனும் நல்ல பெயர் வாங்கிவிட்டால், அப்படியே கோபம் பொத்துக் கொண்டு வந்து விடும்.

போனவாரம் எங்கள் கிளைக்கு வந்திருந்த எம்.டி ஏதோ சின்ன வேலையை ஒழுங்காக முடித்து விட்டேன் என்று பாராட்டி விட்டார். அதிலிருந்து ஏதோ இஞ்சி தின்ற குரங்கு போல் முகத்தை வைத்துக் கொண்டு, என்ன செய்தாலும் குறை சொல்லிக் கொண்டு திரிகிறான்.. வழக்கமாகவே, சின்ன சின்ன வேலையெல்லாம் அவன் எடுத்து முடித்து விடுவான். பெரிய, கடினமான வேலைகள் வரும்போது, என் நினைவும் கூடவே வந்து விடும். நல்ல வேலை செய்வது விருப்பமான ஒன்றுதான். ஆனால், அந்த வேலை செய்து முடித்த பின், "தாங்க்ஸ் மீனா" என்று சொல்லிவிட்டு, அதை அவன் பெயரில் மேலிடத்திற்கு அனுப்பும்போது தான் எரிச்சலாக வரும்.

போன வாரம் அப்படிச் செய்ய முடியாமல் எங்கள் மேலாளர் அவனுக்கு முன்னாலேயே அமர்ந்திருந்தார். நான் தான் செய்தேன் என்ற போது மேனேஜரால் ஒன்றும் சொல்ல முடியாமல் போயிற்று. அதெல்லாம் சேர்த்து வைத்து தான் இந்த வாரம் காண்பிக்கிறான்.

ஏதோ எக்கேடாவது கெட்டுப் போகட்டும், நமக்குத் தேவை இந்தச் சம்பளப் பணம் தானே என்று இத்தனை நாள் பொறுத்துக் கொண்டு தான் இருந்தேன். இன்று கொஞ்சம் காட்டமாகப் பேசி விட்டான். அதிலும், உடல்நிலை சரியில்லாமல், இரண்டு நாள் வீட்டிலேயே முடங்கிக் கிடந்து விட்டு அலுவலகம் செல்லவும், உடனே ஒருவன் திட்டினால் எப்படி இருக்கும்?

நான் போகாத நாளாகப் பார்த்து, தரக் கட்டுப்பாட்டு ஆய்வு வந்து விட்டதாம். இதுவரை, தரமாவது, கட்டுப்பாடாவது, அது சம்பந்தப்பட்ட டாகுமென்டுகளாவது, எதுவும் தெரியாமல் இருந்த மேனேஜருக்கு இது ஒரு பெரிய கறுப்புப் புள்ளியாகி விட்டது. அது தான் அவனுக்கு ஒரே கோபம். பெண்கள் எல்லாரும் இப்படித் தானாம். வேலைக்கு முக்கியத்துவம் தரத் தெரியாதாம். அதிலும் எனக்கு போன வாரம் எம் டியே பாராட்டி விட்டார் என்று தலைக்கனமாம். என்னைப் போன்றவர்களை சஸ்பெண்ட் செய்யும் அதிகாரம் அவனுக்கு இருந்தாலும் அதற்கு அவன் இளகிய மனம் அனுமதிக்க வில்லையாம்.

இந்தக் கடைக்கு வந்து பாலு அங்கும் இங்கும் ஓடியாடி வேலை செய்வதையும், வரும் வாடிக்கையாளர் எல்லாரிடமும் நைச்சியமாகப் பேசுவதையும் பார்த்தாலே பாதி சோர்வு போய்விடும். அதனால் தான் இன்றைக்கு இங்கு வந்தேன்.

"என்னண்ணே, நீங்க வழக்கமா அழைச்சிட்டு வருவீங்களே அந்த அக்கா இன்னிக்கு வரலையா?" யாரிடமோ கேட்டுக் கொண்டிருந்தவன் என்னைப் பார்த்துவிட்டு என்னை நோக்கி வந்தான்

"மீனாக்கா, என்ன மொகமெல்லாம் வாடிக் கெடக்கு?"

"ஒண்ணுமில்லை பாலு. உடம்பு கொஞ்சம் சரியில்லை"

"என்னக்கா, பறவைக் காய்ச்சலா? அது பறவைக்குத் தானே வரணும்? நீங்கதான் சுத்த சைவமாச்சே"

லேசான புன்னகையுடன் சொன்னேன், "இல்லடா, எனக்குத் தான் காய்ச்சல்"

"அப்போ மீனாக் காய்ச்சலா? " என் முகம் இன்னும் மலர்ந்தது.

"என்னக்கா, உங்க முகத்துல சிரிப்பே இல்லை. ஏதோ பிரச்சனை.. வீட்ல யாருக்காவது உடம்பு சரியில்லியா?"

"இல்லடா.."

"ஆபீஸ்ல உங்க மானேஜர் ஏதாவது சொல்லிட்டாரா?"

இல்லை என்று நான் தலை அசைத்தாலும், என் முகம் ஏதோ சொல்லி இருக்க வேண்டும்..

"அதானே பார்த்தேன்.. அதெல்லாம் பெரிசா எடுத்துக்காதீங்கக்கா.. என்ன பெரிய மானேஜர்.. அவங்க திட்டறது எல்லாம் பெரிசா எடுத்துகிட்டா நாம எங்க தான் வேல பாக்க முடியும்.. இப்போ என்னையே எடுத்துக்குங்களேன்.. மாஸ்டர் என்னனென்னவோ சொல்லி திட்டுவாரு.. ஒரு நாளைக்காவது திட்டு வாங்காம இருந்ததில்லை.. ஆனாலும் அப்படியே தொடைச்சு போட்டுட்டு போக வேண்டியது தான்.. "

சின்ன வயதிலிருந்தே பொறுத்துப் போகவேண்டும் என்று யாராவது சொன்னால் சட்டென்று கோபம் வந்து விடும் எனக்கு.. இப்போதும் வந்தது.. எனக்கிருந்த கோபத்துக்கு பாலுவை அப்படியே கடித்துக் குதறி இருப்பேன். அப்போது பார்த்து என் செல்பேசி அழைத்தது..

யார் என்று பார்த்தேன்.. என் அம்மா. இப்போதுள்ள மனநிலையில் அவரிடம் பேச முடியாது.

"அக்கா, போன் அடிக்குது.. "

"அடிக்கட்டும்" கொஞ்சம் கோபமாகவே சொன்னேன் அடித்து ஓய்ந்தபின் தவறவிட்டது மூன்று அழைப்புகள் என்றது செல்பேசி

"என்னக்கா, மூணு தடவைக் கூப்பிட்டுட்டாங்க போலிருக்கு"

"மூணு நாளா கூப்பிடறாங்க.. எடுத்தா ஜுரம்னு சொல்லணும்.. ப்ச்"

அடுத்த முறை அடிக்கத் தொடங்கியது. நானே எதிர்பாராத போது, என் செல்லை எடுத்துப் பேசத் தொடங்கினான் பாலு

"அலோ! யாரு?"

"...."

"மீனாக்காவா? அவங்க நம்பர் தான்ங்கா இது.. ஆனா அவங்க செல்லை கடைல விட்டுட்டுப் போய்ட்டாங்க" எல்லாரும் இவனுக்கு அக்காவா? நானும் அக்கா, என் அம்மாவும் அக்கா..ஹ்ம்..

"...."

"ரெண்டு நாள் இருக்கும்"

"ம்ம். வந்தா சொல்றேன். இன்னிக்கோ நாளைக்கோ கடைக்கு வருவாங்க"

".."

"எம்பேரு பாலுக்கா. நிச்சயம் சொல்றேங்கா! கவலைப் படாதீங்க.. நெறைய வேலை இருக்குன்னு சொன்னாங்க.. அதான் உங்களுக்கு பேசி இருக்க மாட்டாங்க.." அதற்கு மேல் எனக்குப் பொறுக்கவில்லை.

"போதுண்டா!" போனைப் பிடுங்கி அணைத்தேன்..

"அக்கா, ரொம்பக் கோபமா இருக்கீங்க.. ஜூஸ் கொண்டு வரவா?"

"ஒண்ணும் வேண்டாம்.. இதுவரைக்கும் நீ கொடுத்த உபதேசமே போதும்... எவ்வளவு ஆச்சு?"

"இல்லக்கா.. நீங்க கவலையா இருந்தீங்களேன்னு தான்.."

"போதுண்டா.. நான் கிளம்பறேன்.. இதுல நூறு ரூபா இருக்கு.. மிச்சம் இருந்தா வச்சிக்க.. அடுத்த முறை சாப்பிடும் போது பாக்கலாம்" சொல்லிவிட்டு பையைத் தூக்கிக் கொண்டு கிளம்பினேன்.

அவன் அத்து மீறி என் செல்லை எடுத்ததனால் கோபமா இல்லை, என் மானேஜருக்குப் பரிந்து பேசியதா எது என்று எனக்குப் புரியவில்லை. கோபம் மட்டும் இருந்தது..


******** oooooooooooo ********





மீண்டும் நான் நாயர் கடைக்குப் போக ஒரு வாரம் ஆகிவிட்டது. கடையில் பாலு இல்லை
"சேட்டா, பாலு இல்லையா?" என்றேன். நாயரானாலும், அவருடைய பெரும்பான்மையான வாடிக்கையாளர்கள் தமிழ்தான்

"அவன் போயாச்சு" என்றார் அவர்

"எங்கே? ஊருக்கா? "

என் கண்களில் ஒளிர்ந்த கலக்கத்தைப் பார்த்ததும், கேட்டார்:"ஏன், பணம் ஏதும் கொடுத்தோ?"

"ஆமாம்" என்றேன்..கவனிக்காமல்

"பக்கத்து சௌக்ல நோக்கியோ? அங்க தனிக்கடை உண்டு சாருக்கு இப்போ" என்றார்

தனிக்கடையா?!! வியந்தபடி பக்கத்து நாற்சந்திக்கு நடந்தேன்.

"வாங்கக்கா!!!" என்றான் பாலு..

சின்ன டீக்கடை தான்.. இட்லி, தயிர்சாதம், புளி சாதம், தோசை என்று மெனு எழுதி வைத்திருந்தான்.. இரண்டு பேர் தாராளமாக அமரலாம்.. நான்குபேர் கொஞ்சம் சுருக்கி குறுக்கி அமரலாம். "சொர்ணம் டீ ஸ்டால்" என்ற போர்டு, அவன் அம்மா பெயர் என்று நினைவு..

"என்னடா இதெல்லாம்? திடீர்னு?"

"காபி சொல்லவாக்கா? " என்று கேட்டுக் கொண்டே உள்ளே போய் காபி போட ஆரம்பித்தான்.

"நீங்க அன்னிக்கு கோபிச்சிகிட்டு போய்ட்டீங்க இல்லைக்கா... அப்புறம் எனக்கு மனசே சரியில்லை.. லீவு குடுங்க.. வெளியில போய்ட்டு வந்துர்றேன்னு சொன்னேன்.. மாஸ்டர் முடியாதுன்னுட்டாரு.. அது கூட பரவாயில்லை.. எனக்கு எப்பவுமே விளையாட்டு நெனப்புத் தானாம்.. வேலை எதுவும் சரியா செய்ய மாட்டேங்கறேனாம்.. இன்னும் என்னென்னவோ சொன்னாரு.. தெனைக்கும் சொல்றது தான்.. ஆனா, அன்னிக்கு ரொம்ப கோபம் வந்துடுச்சு. உடனே போங்க நீங்களும் உங்க வேலையும்னு சொல்லி வேலையை விட்டுட்டு வந்துட்டேன்.. "

"ஏதுடா உனக்கு தனியா கடை போடற அளவு பணம்?"

"நீங்க கடைசியா கடைக்கு வந்த அன்னிக்கு கொஞ்சம் வருத்தமா இருந்திச்சிக்கா.. அன்னிக்கு நீங்க இருந்தப்போ வந்தாங்களே திலக் அண்ணா, அவர் தான் சொன்னாரு.. மனசிருந்தா வழி தானா தொறக்குமாமே.. அண்ணா கொஞ்சம் பணம் கொடுத்தாங்க சம்பளத்துல ஊருக்குப் போக வச்சிருந்தது.. எல்லாம் சேர்த்து எப்படியோ சமாளிச்சிட்டேன்.. தங்கி இருந்த இடத்தையும் காலி பண்ணியாச்சு.. காபி போடத் தான் நல்லா வரலை... கத்துகிட்டே இருக்கேன்.. "

பெருமையாக என்னை நிமிர்ந்து பார்த்தான்,

"அன்னிக்கு என்னவோ பெரிசா எனக்கு அறிவுரை சொன்ன?" என்னும் கேள்விகள் என் கண்களில் தெரிந்திருக்கவேண்டும்...

இரண்டு நிமிட மௌனத்துக்குப் பின், கொஞ்சம் இறங்கிய குரலில் சொன்னான். "ஒரு விதத்துல பார்த்தா நமக்கென்ன வேணும்னு நாம தாங்கா முடிவு பண்ணணும்.."

காபியை ஆற்றிக் கொண்டே அவன் சொல்லச் சொல்ல எனக்கு யாரோ பொட்டில் அடித்தாற்போல் இருந்தது

"என்னக்கா யோசனை?" என்றான், 'ம்' கூடக் கொட்டாமல் இருப்பதைப் பார்த்து.

"நானும் வேலையை விட்டுட்டலாமான்னு யோசிக்கிறேன்டா.. எத்தனை நாள் சம்பளத்துக்காக ஓடுறது?" சொல்லும்போது என் மனதினுள் ஒரு நம்பிக்கையும் நிம்மதியும் படர்வதை உணர்ந்தேன்..

[பிரசுரித்த நிலாச்சாரலுக்கு நன்றி.. அங்கு வந்த மறுமொழிகளை வைத்துக் கொஞ்சம் செப்பனிட்ட போதும், ஏதோ குறைவது போல் ஒரு எண்ணம்.. யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்களேன்.. ]

Friday, July 28, 2006

சம்மர் ஸ்பெஷல்...

மூணாவது பரிசுக்கே இத்தனை ஆட்டமா?

ரொம்ப குதிக்காம, ஓட்டு போட்ட பெரிய மனுசங்களுக்கு நன்றி சொல்லுங்கம்மா!!!



என்ன முகத்தைக் காணோம்? எங்க ஒளியறீங்க?

ஓ.. பரிசைப் பத்தி இப்போவே பயமா?! அது சரி.. உங்களைப் பார்த்துத் தான் எல்லாரும் பயந்து நடுங்கி கிட்டிருக்காங்களாம்!





என்னவோ, அம்மணி ரொம்ப வெட்கப்படுறாங்க.. நானே சொல்லிடறேன்..



ஓட்டுப் போட்ட எல்லாருக்கும் நன்றி..

முதல் பரிசு வாங்கிய நிலாவுக்கும் ,இரண்டாம் இடத்தில் இருக்கும் லிவிங் ஸ்மைல் வித்யாவுக்கும் பெரிய பெரிய நன்றி.. - வாழ்த்துக்குப் பதில் ஏன் நன்றின்னு கேட்கறீங்களா? எனக்கு இன்னும் நேரம் ஏற்படுத்திக் கொடுத்திருக்காங்களே அதுக்குத் தான் நன்றி.. அப்படியே வாழ்த்துக்களும்..

ஆங், மறந்திட்டேனே, சந்திரா அத்தைக்கும் சேகர் சாருக்கும் ஸ்பெசல் நன்றி..

போட்டியில் பங்கெடுத்து கிட்டவங்களுக்கும் நன்றி.. இல்லைன்னா எண்பதுல மூணாவதா வந்தேன்னு சொல்லிக்க முடியாம போயிருக்குமே!

நாலாவதா வந்த இளா, பிடியுங்க, உங்களுக்கும் ஒரு நன்றி :) - அட, எனக்கு விட்டுக் கொடுத்திருக்காரே!

போட்டி நடத்திய தேன்கூடு, தமிழோவியத்துக்கும் நன்றிங்கோவ்

சரி சரி.. ரொம்பத் தான் ஆடாதேன்னு சொல்றது கேட்குது!! அப்படியே அடக்கி வாசிக்கிறேன்..


அடடா.. சைலன்ட் ஆவுறதுக்கு முன்னாடி..

தலைப்பு கொடுத்தவருக்கு..

.

.

.

நன்றி வாத்தியார்!!


Thursday, July 27, 2006

வாத்தியாருக்காக - விட்டுப் போன யானைகள்




___________________________________________________

கிழக்கும் மேற்கும்

நாடக ஆசிரியர்கள் சந்தித்துக் கொண்டால்...



ஓட்டு போடாதவர்களை ஓட்டுவதா?



தோல்வியதிகாரம்

The Matrix -- ஒரு தேடலின் கதை

அண்டார்டிகாவின் சதி


சொர்க்க வாசம் முடிந்தது!

"குட்டி" நயன்தாரா

சொந்த செலவுல சூனியம்!!!

இளவஞ்சி வாத்தியார் படம் பிடிக்காம விட்டுப் போன யானையைப் போடலாம்னு தான் வந்தேன்.. ஆனா, நானும் ஊர்விட்டு ஊர்வந்து சொந்தக்காரவங்களைப் பார்த்தேன்னு பின்ன எப்படிச் சொல்றதாம்?! அதான் மத்தவங்களையும் போட்டாச்சு..

இந்தப் போட்டோவுக்கெல்லாம் என்ன கமென்ட் கொடுக்கலாம்னு யோசிச்சா, ஒண்ணும் சட்டுன்னு தோணலை.. சரின்னு தமிழ்மணத்தில் இன்று வந்த இடுகைகளின் தலைப்பை எடுத்து கொடுத்தாச்சு.. உள்ளே என்ன இருக்குன்னு நான் படிக்கலை.. ஏதாச்சும் இடுகையோட உள்ளடக்கம் பத்தி விவகாரமா கேட்டா நான் எஸ்கேப்..

எல்லாம் சரிதான், யானைக்கு மட்டும் ஏன் கமென்ட் இல்லைன்னு கேட்கறீங்களா? யானையை எல்லாம் கமென்ட் அடிக்க மனசு வரலை. பொதுவா விசாரிச்ச வகையில் என் ப்ரோபைலில் இருக்கும் யானையை எல்லாக் குழந்தைகளுக்கும் பிடிச்சிருக்காம். ஆக, யானைகள் குட்டி தேவதைகளுக்குப் பிரியமானவை (அட என்னையும் சேர்த்து தான் ;) ).. கமென்ட் அடிச்சா தேவதை சாபத்துக்கு ஆளாய்டுவீங்க ;)

Saturday, July 22, 2006

உயிராவது மிஞ்சலாம்..

கடலுக்கு அப்பால்
விட்டு வந்தவனை
எண்ணிக்
காத்து நிற்கிறேன்.

கால்கள் சோருமுன்
தொடுவான் முகட்டில்
அவன் படகு தெரியலாம்

இயற்கைதந்த கடலில்
மனிதன் வகுத்த
எல்லைகளைத் தாண்டுமுன்
சுட்டும் வீழலாம்
படகும் மூழ்கலாம்
கண்ணிலும் படலாம்...
படாமலும் அழியலாம்.


எல்லாம் கடந்து
வந்துவிடு!

உணவு கிடைக்குமோ
நம் உணர்வு புரியுமோ.....
தெரியவில்லை,

... உயிராவது மிஞ்சலாம்!!!

Sunday, July 16, 2006

உள்ளடக்கம் - அட்டவணை

பொன்ஸ் பக்கங்களின் சின்ன உள்ளடக்கம்

என்னைப் பற்றி

சிறுகதை முயற்சிகள்

கவிதைகள் என்று எழுதியவை...


அறிவியல்/கணினி
விளையாட்டுப் பொன்ஸ்

பயணக் கட்டுரைகள்

விழியம்

விமர்சனங்கள்

எனக்குப் பிடித்த என் பதிவுகள் சில

நட்சத்திரப் பதிவுகள்

சிறுவர் பக்கங்கள்

- டிசம்பர் 9, 2006 அன்று புதுப்பிக்கப்பட்டது

இன்னுமொரு பங்கு



தினம் போல
அருகில் வந்து
தொடவில்லை
என்று
முகம் திருப்பிக் கொள்கிறது
எதிர்வீட்டு மல்லிச்செடி;



முன்போல
கையாட்டி ரசிப்பதில்லை
என்று
கடும்கோபம் கொள்கிறது
மின்சார ரயில்;




காலைப் பரபரப்பில்
துடைக்காமல்
விட்டதற்காக
கடுப்படிக்கிறது
முகம் பார்க்கும் கண்ணாடி;



ஏனோ
இன்று புதிதாகப்
பூ வாங்கித்
தொடுக்கிறேன்
என் வாகனத்தில்



நாளை முதல்
எதிர்பார்ப்பும் கோபமும்
ஏமாற்றத்தின் புலம்பலும்
ஏறி விடும்



இன்னுமொரு பங்கு...

Wednesday, July 12, 2006

அந்தப் பயம் - தேன்கூடு

"ஏய் சிவா, யாரைத் தேடுற? ஸ்ரீகாந்தையா? அவன் கிளம்பியாச்சு.. உன்னை இருந்து அழைச்சிகிட்டு வரச் சொல்லி என்கிட்ட சொன்னான்.. வரியா?"

"என்னது?! நீ என்னை அழைச்சிகிட்டு போகப் போறியா? நீயே அடுத்தவங்களோட தொத்திகிட்டு வர்றவ தானே?"

"இல்லையே.. இப்போ நான் கார் எடுத்திருக்கேனே.. உனக்குத் தெரியாதா?"

"என்னது, கார் எடுத்தியா?"

"ஆமாம், அதான் கம்பனில பணம் தராங்க இல்லை.. அப்புறம் ஏன் வேஸ்ட் பண்ணணும்னு.. கார் எடுத்தேன்.. வரியா?"

"ம்ம்.. வரேன்.., வேற வழி?"

"பெல்டைப் போடு.. கதவை ஒழுங்கா சார்த்து.. என்ன நீ உனக்கு கதவைச் சார்த்தக் கூடத் தெரியலை?!! "

"சரி சரி.. ரொம்ப பேசாத.. வண்டிய எடு."

"ம்ம்.. " எடுத்தாள். மெல்ல நகரத் தொடங்கியது வண்டி..

"ஆமா, நீ காரெல்லாம் ஓட்டுவியா? நான் எதிர்பார்க்கவே இல்லை..."

"ஓட்டாம, பின்ன.. எல்லாம் ஓட்ட வேண்டியது தான்.. பாட்டு கேட்கறியா?"

"தமிழ்ப்பாட்டுலாம் வச்சிருக்க?"

"ம்ம்ம்.. அதோ அந்த சிடி.. இளைய ராஜா, ஏர். ரஹ்மான் எல்லாம் இருக்கும் பாரு.. "

"இதுவா? "

"அது இல்ல.. உள்ள இருக்கும்.. "

எங்கே என்று தேடினான்

"அதோ அது தான்.. அப்படித் தான் திறக்கணும்.. என்ன நீ, இதுவரை காரில் ஏறினதே இல்லையா? இப்படித் தடவற!"

"..."

"இப்போ இதைப் போடத் தெரியுமா இல்லை அதுவும் நான் தான் செய்யணுமா? "
முறைத்துவிட்டு ஒலிப்பேழையை உள்ளே தள்ளினான். கொஞ்ச நேரம் பாட்டு மட்டும் ஒலித்தது.. ..

"ஏய்!..ஏய்!.. என்னது இது.. இப்படி ப்ரேக் போடற?" வண்டி ஏற்கனவே நின்றிருந்த காரின் பின் விளக்கைக் கிட்டத் தட்ட இடிப்பது போல் உரசி நின்றது.

"என்ன பண்ணச் சொல்ற?!! திடீர்னு தான் பார்த்தேன்.. அங்க சிக்னல் இருக்கு..."

"ஓ.." கொஞ்சம் பயத்துடன்.. "ஆமாம், அதென்ன ரெண்டு காலை வச்சி ஓட்டற?"

"பின்ன, ஒண்ணு ஆக்சலரேட்டருக்கு.. இன்னோண்ணு ப்ரேக் பிடிக்க.."

"ஓ, வெளங்கிரும்.. உனக்கு நிஜமாவே கார் ஓட்டத் தெரியுமா?"

"என்ன நீ, திரும்பித் திரும்பி கேட்குற?!! அதான் ஓட்டறேனே.."

"ஏய்!.. ஏய்!.. இரு இரு.. முன்னாடி பார்த்து ஓட்டு.. என்னைப் பார்க்காதே.. "

இன்னொரு சடன் ப்ரேக்.. ஓட்டுதளம்(லேன்) மாறிப்போனதில் பின்னால் வந்து கொண்டிருந்த பேரூர்தி (ட்ரக்) பெரிதாக ஒலிப்பானை அமுக்கி எச்சரித்துவிட்டு கொஞ்சம் ஒதுங்கிச் சென்றது. ஒதுங்கி விட்டதால் ஏதோ கார் பிழைத்தது..

"ஹி.. ஹி.. " என திரும்பிப் பார்த்து இளித்தாள்..

"கொஞ்சம் பார்த்து ஓட்டும்மா. எங்கம்மாவுக்கு நான் தான் ஒரே முதல் பையன்.."

"ம்ம்.. பார்க்கிறேன்.."

சொல்லிக் கொண்டே சாலை திருப்பத்தில் எதிரில் வரும் காருடன் தலைக்குத் தலை மோத முயன்று சட்டென எதிர் வண்டிக்காரன் சுதாரித்துத் திரும்பியதில் தலை தப்பியது.

"ராங் சைட் வந்திருக்கேன் போலிருக்கு..." அப்பாவியாகச் சொன்னாள்.

"ஓ மை காட்.. இது எங்க போய் முடியப் போகுதோ!!"

திடீரென அவனுக்குள் அந்தக் கேள்வி உதித்தது..

"ஏய், உன்கிட்ட லைசன்ஸ் இருக்கா?"

"ஹி ஹி சிவா.. அதெல்லாம் எதுக்கு? அதான் உன் கிட்ட இன்சூரன்ஸ் இருக்கே.."

சிவாவின் பார்வையில் இருந்தது கொலைவெறியா, சுய பச்சாதாபமா, கோபமா, இல்லை மீண்டும் வண்டியைக் கிளப்பிவிட்டாளே என்னும் மரண பயமா?

[ ஹி ஹி.. வாத்தியார் மரணம்னு தலைப்பு கொடுத்தாலும் கொடுத்தார்.. எல்லா பக்கத்திலும் மரணத்தைப் பத்தி ஒரே உருக்கமான, நெஞ்சைத் தொடும் கதைகளா ஆகிடுச்சு.. அதான்.. கொஞ்சம் மூட் மாத்தலாம்னு யோசிச்சேன்.. :)) ]

அந்தப் பயம் - தேன்கூடு போட்டிக்கு இல்லை..

Friday, July 07, 2006

சந்திரா அத்தை - தேன்கூடு போட்டிக்கு

ந்திரா அத்தையை நடுவீட்டில் கிடத்தி இருந்தார்கள். அமைதியும் கனிவுமான அவள் புன்னகை அவள் இன்னும் தூங்கிக் கொண்டிருப்பதாகவே எண்ணச் செய்தது. நடுவீட்டில் படுப்பது அவளுக்குப் பிடிக்காது. என்ன செய்ய? இன்னும் கொஞ்சம் நேரம் தான் அத்தை, பொறுத்துக் கொள்.

அத்தை அன்பின் வடிவம். எதற்குமே அவளுக்குக் கோபம் வராது. ரொம்ப அனுசரணை, பாசம். அதிர்ந்து பேச மாட்டாள். திட்டும் போது கூட அவள் குரல் ஏதோ சங்கீதம் மாதிரி தான் ஒலிக்கும். கோபமே இல்லாமல் ஒருவரால் எப்படி இருக்க முடியும் என்று ஒவ்வொரு முறை அத்தையைப் பார்க்கும் போதும் எனக்குத் தோன்றும்.

"ப்படி ஆச்சு?" புதிதாக வந்தவர் யாரோ கேட்டது என் சிந்தனையைக் கலைத்தது.

"எங்கே?, எப்படி?, எப்போது?, எப்போ எடுக்கப் போறீங்க?, யாருக்காகக் காத்திருக்கீங்க?" இழவு வீடுகளில் பேச மக்களுக்கு வேறு எதுவுமே இருக்காதா? பேச வேண்டிய அவசியம் தான் என்ன? இறந்து போன ஆத்மாவை பற்றி நினைத்துப் பார்க்க மட்டும் யாருக்கும் மனம் வருவதில்லை.

அத்தை தனது கணவரின் மரணத்தை எதிர்கொண்ட விதம் பற்றி அம்மா சொல்லிக் கேட்டிருக்கிறேன். அப்போது அத்தைக்கு இருபது இருபத்தோரு வயது தானாம். மூன்று வருட மண வாழ்க்கைக்கு ஆதாரமாக, இரண்டு பெண் குழந்தைகள் கையில். பின்னாளில் தன்னை வைத்துக் காப்பாற்றப் போகிறான் என்ற நம்பிக்கையைப் பொய்ப்பித்த ஒரே மகன் வயிற்றில். விபத்தில் உருக்குலைந்து மூட்டையாக எடுத்து வரப்பட்ட கணவனது உடலைப் பார்த்தும் அத்தை புலம்பவில்லையாம். ஒரு வரி நீரோடு அவள் பெற்றோரையும் மாமியாரையும் தேற்றியது பற்றி அம்மா கதை கதையாகச் சொல்லுவாள். தைரியத்துக்குப் பெயர் போனவள் அத்தை..

பாதி மலர்ந்த நித்ய மல்லிகளைப் பறித்தபடி பேசிக் கொண்டிருந்த ஒரு மாலை நேரத்தில் இது பற்றி அவளிடம் கேட்டிருக்கிறேன்..

"அத்தை, மாமா இறந்தபோது எப்படி நீ அழாம இருந்த?"

அத்தை மெலிதான ஒரு புன்னகை பூத்தாள்.. ஒரு சுகமான வேதனை கலந்த புன்னகை.

"அவர் இன்னும் எனக்குள்ள வாழ்ந்துகிட்டு தானே இருக்கார்.. நானும் இல்லாம போனாத் தான் அவருக்கு இறப்பு" என்றாள். அதற்கு மேல் அவளைப் பேச வைக்க முடியவில்லை.


"ழுபத்தஞ்சு வயசு.. கல்யாணச் சாவு தான்!" யாரோ ஒரு நடுத்தர வயதுப் பெண் சொல்லிக் கொண்டிருந்தாள். எப்படியும் இந்தச் சாவு நமக்கு இப்போதைக்கு வராது என்னும் எண்ணம் தான் இப்படி எல்லாம் பேச வைக்கிறதா? அக்கம் பக்கம் பார்த்துப் பேச வேண்டாம்? இறப்பில் கலந்து கொள்ள வந்திருந்த ஒன்றிரண்டு வயதானவர்களின் முகங்களில் ஒரு பயம் படர்வதைப் பார்க்க முடிந்தது. ஒருவேளை இவளுக்கு ரொம்பவும் நெருக்கமான ஒருவரது இறப்பாக இருந்தால் அப்போதும் இப்படித் தான் சொல்வாளோ? அந்தப் பெண் என்னை ஒரு மாதிரி பார்த்தாள். ரொம்ப நேரமாக அவளையே முறைப்பதை உணர்ந்து பார்வையை விலக்கிக் கொண்டேன்.

அத்தை இந்த மாதிரி பேசுபவர்களைத் தாங்கிக் கொள்ளவே மாட்டாள். ஒரு முறை கோயில் வாசலில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த ஊனமுற்றவன் ஒருவனுக்கு உதவக் கூடாது என்று நான் சொன்னதற்காக என்னை உட்கார வைத்து அறிவுரை சொன்னாள். "நமக்கு நாக்கு கொடுத்திருக்கிறதே நல்ல விஷயங்களைப் பேசத் தான்.. அடுத்தவங்க மனசு புண்படாம பேசணும்..இல்லைன்னா நீ என்கிட்டயும் பேசவே வேண்டாம்!!".

ஊனமுற்றவர்கள், முதியோர், சிறுவர்கள், வாயில்லா ஜீவன்கள் என்று அத்தையின் அன்பு ஒரு அமுத சுரபி. எல்லாத் திக்கிலும் பயணம் செய்ய வல்லது. இனிமேல் உன்னை எங்கே பார்க்கப் போகிறேன் அத்தை? உன் மடி மேல் தலை வைத்து உறங்கப் போவது எப்போது?

யாரோ என் தலையைத் தொட்டது போல் இருந்தது.. நிமிர்ந்து பார்த்தேன்.. ஜன்னல் வழியே அவள் வளர்த்த செம்பருத்திச் செடி.. காற்றுக்கு மோதியிருக்கிறது.. அத்தை இந்த அறையில் இன்னும் இருக்கிறாள். அதன் அடையாளம் தான் இந்தச் செடி என்று ஏனோ தோன்றியது..

"தோ அவன் தானா?" மீண்டும் யாருடைய குரலோ என்னை நினைவுலகுக்கு அழைத்து வந்தது..

"அவனே தான்.. உட்கார்ந்திருக்கான் பாரு.. கல்லுப் பிள்ளையார் மாதிரி.."

"எல்லாம் நேத்தி வரைக்கும் ஆட்டம் போட்டுகிட்டு தான் இருந்தா.. என்னிக்கு அடங்கி இருந்திருக்கா.. இவ ஆட்டம் தாங்காம தான் கட்டினவனும் சிக்கிரமே போய்ச் சேர்ந்துட்டான்.. " இது அத்தை மகள் சித்ராவின் மாமியார் குரல்.

அவள் பார்வை போன திசையைப் பார்த்தேன். அங்கே அத்தையின் வலது பக்கத்தில் அமர்ந்திருந்தது சேகர் சார். சேகர் சாரை அத்தைக்கு அறிமுகம் செய்தது நான் தான்.

அத்தையை அவள் மகன், தங்கை சித்ரா வீட்டில் கொண்டு விட்ட புதிதில் அந்தப் பேரதிர்ச்சியைப் பகிர்வதற்கு ஆள் இல்லாமல் கொஞ்சம் மனம் வெறுத்துப் போயிருந்தாள். அந்த நாட்களில் வற்புறுத்தி நடைபயிற்சிக்கு அழைத்துச் சென்ற ஒரு மாலை வேளையில் சேகர் சார் வீடு, சித்ராவின் பக்கத்துத் தெருவில் தான் என்று தெரியவந்தது.

முதல் அறிமுகத்திலேயே இருவருக்கும் இடையில் ஒரு இயல்பான நட்பு மலர்ந்துவிட்டது எனலாம். இயல்பான நட்பு என்பதை விட இயற்கையான நட்பு என்பது தான் சரியாக இருக்கும். சேகர் சார் ஓய்வு பெற்ற தாவரவியல் ஆராய்ச்சியாளர். அத்தைக்கும் மரம் செடி, கொடி என்றால் உயிர். இயற்கையைப் பற்றிப் பேசத் தொடங்கினால் இருவருக்கும் நேரம் போவதே தெரியாது.

சேகர் சார் ஒரு மூலிகைத் தோட்டம் வேறு வைத்திருந்தார். அதில் தானே ஏதோ ஆராய்ச்சி செய்து இந்த வயதிலும் கட்டுரைகள் எழுதிக் கொண்டிருந்தார். பாதி நேரம் அத்தை கட்டுரைகளைப் பிழை திருத்தி அழகாக எழுதிக் கொடுப்பாள்.

இருவரும் மரங்கள், செடி கொடிகள் பற்றிப் பேசும்போது அமைதியாக உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பேன். உலகம் எல்லாம் சுற்றி வந்த பேராசிரியருக்குச் சரிக்குச் சரியாக ஒரு ஆரம்பப் பள்ளி ஆசிரியை பேசுவது ரொம்ப வியப்பளிக்கும் நிகழ்வு.

மழை இல்லாத மாலை வேளைகளில் இருவரும் சேர்ந்து நடை பயில்வதும் நடக்கும். புதுப் புது பாதைகளைத் தேர்ந்தெடுத்து நடப்பார்கள். அலுவலக வேலை மென்னியைப் பிடிக்காத பல நாட்களில் நானும் அவர்களிடையே நடந்திருக்கிறேன். அப்போதெல்லாம் அவர்களுக்குள் ஏதும் பேச்சு வார்த்தை இருக்காது. ஆனால் ஏதோ ஒரு கருத்தொருமித்த எண்ண ஓட்டம் இருக்கும். வெகுநேர மௌனத்துக்குப் பின் பேசத் தொடங்கும் போது இருவரும் ஒரே சொல்லையோ ஒரே கருத்தையோ சொல்லத் தொடங்கி அடுத்தவருக்காக நிறுத்துவது அடிக்கடி ஏற்படும். சொற்கள் அவசியமில்லாமல் போன மனதின் உரையாடல்கள் அவை.

சில சமயம் மதிய வேளைகளில் கூட சேகர் சார் வந்து சித்ரா வீட்டில் அமர்ந்திருப்பார். இருவரும் பேசும் போது பல விஷயங்களைத் தொட்டுச் செல்லும் பேச்சுகளில் சித்ராவும் கலந்து கொள்வதுண்டு. சித்ரா மாமியார் தான் கொஞ்சம் முகத்தைச் சுளித்தபடி பார்த்துவிட்டுப் போவார். அத்தை இருக்கும் போது பேசத் துணியாத இவர்கள் எல்லாம் இன்று அவளது உடலை வைத்துக் கொண்டே பேசுகிறார்கள். அடுத்தவர் மனதைக் குத்திக் கிழிக்கும் சொற்களை அனாயாசமாகப் பேசும் இந்த நாகரிக சீமாட்டிகளை என்ன செய்வது?

மீண்டும் சேகர் சாரைப் பார்த்தேன். அவர் முகத்தில் அதே அமைதி இருந்தது. நடை பயிலும்போது இருக்கும் தீவிரமான கவனம். கனிவு, கூர்மையான பார்வை. அத்தை முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார். எத்தனை நேரம் இப்படி அமர்ந்திருந்தாரோ தெரியவில்லை. நானும் பேசாமல் இருந்தேன் என்றபோதும், அழுததில் கொஞ்சம் ஆறுதல் ஏற்பட்டிருந்தது. சேகர் சாரின் கண்களில் துளி கண்ணீரும் இல்லை. அத்தை உயிருடன் இல்லை என்பது அவருக்குத் தெரிந்ததா?

எங்கள் கல்லூரியைச் சேர்ந்த ஒரு மாணவன் இறந்த அன்று அவர் அழுதது எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. யார் யாருக்கோ வருத்தப்பட்டவருக்கு இன்று அத்தைக்காக அழ மனமில்லையா என்ன? "கல்லுப் பிள்ளையார்" என்னும் பதத்துக்கு பொருள் புரிந்ததில் எனக்கே ஒரு மாதிரி தான் இருந்தது.

சேகர் சார் சாரின் நீடித்த பார்வைத் தவம் சற்றே கலைந்தது. மெல்ல ஆம் என்பதாகத் தலையை ஆட்டினார். அதன் பின் திரும்பி வாசலை நோக்கி நடக்கத் தொடங்கினார்.

இதற்குள் வாசலில் அரவம் கேட்டது. அத்தையின் ஒரே மகன் சரவணன் வந்துவிட்டான். சேகர் சார் மெதுவாக விலகி வெளியில் போய்க் கொண்டிருந்தார்.

சரவணன் தாம் தூம் என்று வந்தான்.. "அம்மாவுக்கு இப்படி ஆய்டுச்சே.. என் பக்கத்துல இருக்கும் போது இப்படி ஆகி இருக்கக் கூடாதா" இன்னும் எதேதோ! இருக்கும் போது வந்து பார்க்கத் தெரியவில்லை.. இப்போது போலியான அழுகை.. போலியான கவலை.. என்னைச் சுற்றி இருக்கும் யாருக்குமே உண்மையான அக்கறை இல்லை.. எல்லாமே பொய் முகங்கள்.

சேகர் சாருடன் ஏதோ ஒன்று அந்த அறையிலிருந்து வெளியே சென்றுவிட்டதாகத் தோன்றியது. நானும் அந்தக் களேபரங்களிலிருந்து தப்பி வாசலுக்கு வந்தேன். சார் வாசலில் வழக்கமாக அத்தை அமர்ந்து பேசும் ஊஞ்சலுக்கு அருகில் உள்ள இருக்கையில் அமர்ந்தார். யாரோ பேசுவதைக் கேட்பது போல் ஒரு பாவனையில் கண்மூடி அமர்ந்து கொண்டிருந்தார்.
மெல்ல அருகில் சென்று அவரைத் தொட்டு எழுப்பினேன்.

"அழுதுடுங்க சார்!" இங்கு வந்தது முதல் நான் பேசிய முதல் வாக்கியம்..

சார் ஏதோ சிந்தனை கலைந்த கேள்வி பொதிந்த கண்களுடன் நிமிர்ந்தார். என் கண்களில் விடை கிடைத்திருக்க வேண்டும்.

"ஏன் அழணும்? அழுதா சந்திராவுக்குப் பிடிக்காது. சந்திராவுக்கு ஒண்ணும் ஆகலை." என்றபடி மெல்லத் திரும்பி ஊஞ்சலைப் பார்த்தார் "இதோ என்கிட்ட பேசிகிட்டு தான் இருக்கா. நானும் இல்லாமல் போனால் ஒரு வேளை அவள் இறந்து போகலாம். அதுவரை இங்க தான் இருக்கா." கணீரென்று தொடங்கிய குரல் மென்மையாக முடிந்தது. அவரது பார்வை தொடர்ந்து அந்த ஊஞ்சலைத் தடவிக் கொடுக்கத் தொடங்கியது.

பதில் சொல்ல எதுவுமில்லாமல், வழக்கமாய் நான் உட்காரும் நாற்காலியில் சாய்ந்தேன். அதே தென்றல் இந்த முறை ஊஞ்சலை லேசாக ஆட்டிவிட்டு நித்திய மல்லியின் பூக்களை என் தலையில் தூவி விட்டுச்சென்றது. சாருடன் சேர்ந்து அத்தையும் ஊஞ்சலுக்கு வந்து விட்டாள் போலும்.

ன்றைய காரியம் எல்லாம் முடிந்து சரியாய் ஐந்து நாட்கள் கழித்து சந்திரா அத்தை செத்துப் போனாள்.

[மீண்டும் படித்து பின்னூட்டங்களில் சொல்லப் பட்ட மாற்றங்களைச் செய்த நாள்: அக் 05,2006 ]

Tuesday, July 04, 2006

வெரோனிகா இறக்கப் போகிறாள்

தி அல்கெமிஸ்ட்(The Alchemist) என்னும் "இரும்பைப் பொன்னாக்குபவனின்" கதை மூலம் புகழடைந்த பாலோ கோய்லோ (Paulo Coelho) எனக்கு அறிமுகமானது தற்செயல் தான். புது வேலை தேடும் போது, என்னவெல்லாம் கஷ்டங்களைச் சந்திக்க வேண்டி இருக்கிறது என்று பேசப் போக, சக அலுவலகத் தோழி வாழ்க்கையின் பொருளை (அர்த்தத்தைத்) தேடும் இளைஞனைப் பற்றிய இந்தக் கதையைக் கொடுத்தார். அதிலிருந்து தொடங்கி கிட்டத்தட்ட பாலோவின் எல்லா நாவல்களையும் நான் படித்திருக்கிறேன்.

பாலோவின் நாவல்களில் எனக்குப் பிடித்த விஷயங்கள் இரண்டு.

1. அமெரிக்கப் பின்னணியிலேயே எழுதப்பட்ட ஆங்கில நாவல்களிலிருந்து வேறுபட்டு பாலோவின் நாவல்கள் ஐரோப்பியாவின் அதிகம் கேள்விப்படாத பக்கங்களைப் பேசுவது வழக்கம் - அதிலும் அமெரிக்கக் கண்ணோட்டத்தில் இல்லாமல் ஐரோப்பியாவைப் பேசும்.

2. எல்லாக் கதைகளும், ஆற்றொழுக்கான இயல்பான நடையில், அவருடைய சொந்தக் கதை தானோ என்று எண்ணும் அளவுக்கு ஒன்றிப் போய் எழுதி இருப்பார். வாசகனின் கூறுகளையும் சில(பல) இடங்களில் கதை நாயகனிடம்/நாயகியிடம் பார்க்க முடியும்.

நான் படித்த நாவல்களில் எனக்குப் பிடித்த பக்கங்களை இந்தப் பதிவில் எழுதப் போகிறேன். திறனாய்வு என்று சொல்ல முடியாது. திறனாயும் அளவுக்குக் குறைகள் பிடிபடவில்லை.

Eleven Minutes

பிரேசிலின் குக்கிராமத்தில் வளர்ந்த ஒரு சின்னப் பெண் மரியா, காதலுடனான தன் ஆரம்பத் தோல்விகளால் மனமுடைந்து காதல் என்பதான ஒன்று உலகத்தில் இல்லவே இல்லை என்று முடிவெடுக்கிறாள். பணம் தான் முக்கியம், காதல் அன்பு பாசம் என்பதெல்லாம் வெறும் அடிமைத்தனமே என்னும் எண்ணத்துடன் அந்தக் கிராமத்தை விட்டுத் தப்பிப்பது தான் பணம் சேர்க்க ஒரே வழி என்றும் கண்டு கொள்ளுகிறாள்.

சுற்றுலாப் பிரயாணி ஒருவனின் உதவியால் ஜெனிவா செல்லவும் அங்கு மாடலாகிச் சம்பாதிக்கலாம் என்றும் எண்ணி வீட்டை விட்டு ஓடி வந்துவிடுகிறாள். பல நாட்கள் ஆகியும் அவளை மாடலாக வைத்துப் படம் எடுக்கவோ, விளம்பரப்படம் செய்யவோ யாரும் முன்வரவில்லை. கொண்டுவந்த பணம் கொஞ்சம் கொஞ்சமாகக் கரைந்த பொழுது, தோற்றுப் போய் ஊர்திரும்பப் பிடிக்காமல் இப்போதைய ஆடம்பரமான வாழ்க்கையையும் விட முடியாமல், ஏற்கனவே உணவு பரிமாறும் வேலை மட்டும் செய்யும் உணவு விடுதியில் விபச்சாரியாகவும் தொழில் தொடங்குகிறாள்.

தினசரி பார்க்கும் ஆண்கள், அவர்தம் பயங்கள், ஆசைகள், தயக்கங்கள், கஷ்டங்கள் இவையெல்லாம் சேர்ந்து வெறும் பதினோரு நிமிடத்தில் முடிந்துவிடக் கூடிய உறவுக்காக, பல வருடங்கள் சேர்ந்து வாழ்வது, குழந்தை, குடும்பம், பொறுப்பு, வேலை, எல்லாமே வீணான ஒன்று என்னும் எண்ணத்தைப் பலப்படுத்துகிறது.

"உண்மைக் காதல் என்ற ஒன்று உலகத்தில் இல்லை. நான் நானாக இருக்க அனுமதிக்கும் அடிமைத் தனமில்லாத அன்பு கிடைக்க வாய்ப்பே இல்லை" என்று மரியா முடிவெடுக்கும் போது தான் அவள் எதிர்பார்த்த அந்தக் காதலனைப் பார்க்கிறாள். இவன் எனக்கானவன் என்று மரியாவும் அந்த இளைஞனும் உணரும் போது, அந்தப் பதினோரு நிமிடங்களைப் பற்றிய அவளது பார்வை மாறுகிறது. பாசாங்குகளற்ற உறவுக்கும் அடிமைத்தனமில்லாத அன்புக்குமான வழி அவளுக்குத் திறக்கிறது.

வெரோனிகா இறக்கப் போகிறாள்


வெரோனிகா தன் இருபதுகளின் ஆரம்பத்தில் இருக்கும் அழகான இளம்பெண். சொந்த சம்பாத்தியம், நண்பர்கள், இயல்பான வாழ்க்கை என்று வாழ்ந்துகொண்டிருக்கும் போது தான் ஒரு நாள் அந்த முடிவுக்கு வருகிறாள் - தற்கொலை.

ஒரே மாதிரி சென்று கொண்டிருக்கும் வாழ்க்கை எப்படியும் ஒரு நாள் முடியப் போகிறது. வயதாகும் வரை ஏன் காத்திருக்க வேண்டும்? இன்றே இறந்துவிடலாமே. அவள் அம்மாவைத் தவிர வேறு யாருக்கும் அவளது இறப்பு எந்தத் துன்பத்தையும் தராது. அருகில் இல்லாத அம்மாவும் கொஞ்ச நாள் வருந்துவாள். எப்படியும் ஒரு நாள் இறக்கவேண்டியவள் தானே வெரோனிகா. அது ஏன் இன்றாக இருக்கக் கூடாது?

இப்படி ஆரம்பிக்கும் Veronika Decides to Die, அந்நாளைய யூகோஸ்லோவியாவிலிருந்து பிரிந்து வந்த ஸ்லோவினியா என்னும் நாட்டைக் கதைக் களமாகக் கொண்டிருக்கிறது.

தூக்க மாத்திரைகளை விழுங்கி இறக்க முடிவெடுக்கும் வெரோனிகா கடைசி கடிதம் என்று யாருக்கு எழுதுவது என்று தெரியாமல், அன்றைய தினசரிகளில் வந்திருக்கும் ஒரு கட்டுரையாசிரியருக்கு எழுதுகிறாள். அந்தக் கட்டுரை "ஸ்லோவினியா என்பது எங்குள்ளது?" என்று ஒரு நாட்டின் இருப்பையே கேள்விக்குள்ளாக்கிக் கொண்டு தொடங்குகிறது.

பாதி எழுதுகையில் மயங்கிவிடும் வெரோனிகா ஸ்லோவினியத் தலைநகரமான ஜூப்ளிஜானாவின் புகழ்பெற்ற மனநல விடுதியில் கண்விழிக்கிறாள். - பத்திரிக்கைக் கட்டுரைக்காக உயிர்விடத் துணிந்தவளை வேறெங்கே அனுமதிப்பார்கள்?

இன்று காப்பாற்றப்பட்டாலும், இன்னும் ஏழு நாட்களில் இறக்கப் போகும் உண்மையை வெரோனிகாவிடம் சொல்கிறார் தலைமை மருத்துவர்.
உயிரின் மீது எந்த ஆசையும் இல்லாமல், அதற்கு முன்பே இறந்து போக என்னவழி என்று யோசித்துக் கொண்டிருக்கும் வெரோனிகாவின் வாழ்விலும் அன்பு என்னும் அமுத சுரபி குறுக்கிடுகிறது, மற்றொரு மனநோயாளி என்று இல்லத்தில் வசிக்கும் இளைஞன் மூலம்.

பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்து, பணம் சம்பாதிக்கும் ஆர்வமே இல்லாத இந்த இளைஞன் ஆசிரியரின் மறுபதிப்பே. யாரிடமும் பேச மறுக்கும் இந்த இளைஞன், வெரோனிகாவின் இனிய பியானோ இசைக்கு ரசிகனாகி, பின்னர் வெரோனிகாவின் பாசாங்கற்ற நேசத்துக்கும் உரித்தாகிறான். பலகாலமாக வெளியுலகில் இருவரும் தேடிக் கொண்டிருந்த அந்த அன்பு அவர்களுக்கு ஒரு மனநோயாளிகளின் காப்பகத்தில் கிடைக்கிறது..

இந்தக் கதையின் முதல் பகுதி என்னைக் கவர்ந்தது. வெரோனிகாவின் தற்கொலை முயற்சியும், அதுசமயம் அவளுடைய எண்ண ஓட்டங்களும், ஆசிரியர் அழகாக விவரித்திருப்பார். இறுதியில், வேறு யாருடனும் இல்லாத வகையில் கதை நாயகனுடன் வெரோனிகா தான் தானாக இருக்கும் சில நிமிடங்களும் மிக அழகான ஆர்ப்பாட்டமில்லாத வர்ணனையாகும்.

பொதுவாக, பாலோவின் கதைகளை, அடுத்து என்ன ஆகப் போகிறது என்று ஊகிக்காமல், கதையின் போக்கிலேயே போய்ப் படிக்க வேண்டும்.
எல்லாக் கதைகளுமே இது மாதிரி பாசாங்கில்லாத அன்பையும் அடிமைத்தனமில்லா நேசத்தியும் அடிப்படையாகக் கொண்டது தான். இன்னும் எனக்குப் பிடித்த மற்றொரு கதை O Zahir.

கதைகளைப் படித்துப் பல நாட்கள் ஆன போதும் அருளின் இந்தப் பதிவும் அதில் குழலியின் பின்னூட்டங்களும் இந்தக் கதைகளை மீண்டும் நினைவுப்படுத்தி விட்டன..

இந்தக் கதைகள் படிக்கையில், மற்றவர் மீதான நமது அன்பை நிச்சயம் ஒருமுறை மீள் பரிசோதனை செய்யத் தூண்டும்.

வெட்டியாய்ச் சுட்டவை ஐந்து


ஒற்றைப் பனையாம் உவமை அழிந்தது
இற்றைக்கு ஓர்-ஆன்ட் டெனா





தனியொருவனுக் கிடமிலையெனில்

தார்ச்சாலையில் படுப்போம்..


"களைப்பான நாள்,

கடுப்படிக்கும் வேலை"

'கடலை' நல்லா வறுபடுது.,

கசங்கிப் போனது நான் மட்டும் தான்..


எவனுக்கோ கல்யாணம்,

எனக்கு அலங்காரம்!

யாரையோ சுமக்காமல்

நீரைச் சேமிப்பது எப்போது?

ஆரோக்கியமான புரவிதான்

அதிவேகமாகத் தான் விரட்டுகிறேன்

இந்த (புத்தக) அட்டையிலிருந்து

இறங்கினால் தானே!!


[ஹி ஹி... செல் வாங்கின புதுசுல கண்டதையும் சுட்டது.. ச்ச்சும்மா எடுத்துப் போட்டுப் பார்த்தேன்.. ஒரு டைம் பாஸ் :)) ]

Saturday, July 01, 2006

கேள்விகளின் இடையில்

அரைவட்ட அறையின்
ஒவ்வொரு திக்கிலிருந்தும்
குத்தி நிற்கும்
ஈட்டி போல்,
பதில் தெரியாக் கேள்விகளின்
இடையில் நான்...

பதில் தேடிப் பிடித்தால்,
ஒவ்வொரு
பதிலுக்குப் பின்னும்
ஒளிந்து சிரிக்கும்
மற்றுமொரு கேள்வி

இருளில்
ஒவ்வொன்றாய்க்
கண்சிமிட்டும் விண்மீன் போல்
முளைத்து வரும்
கேள்விகளில்
விடை தேடித்
தொலைந்து போகிறேன்